டோரதி விமர்சனம்

1990 ல் தென் தமிழக கிராமத்தின் கதையாக டோரதி தொடங்குகிறது.அந்த ஊரின் பெரும் புள்ளியான முத்துக்குமார் தனது ஆதிக்கத்தையும் குடும்பத்தையும் கொடூரமான தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.இவருக்கு இரண்டு மகன்கள் சௌந்தரராஜா மற்றும் சனந்த்.சிறு வயதிலிருந்தே ரிஷிகாந்த் சனந்த்திற்கு உயிர் நண்பன்.ரிஷிகாந்த் வெளியுலகிற்கு முரட்டுத்தனமானவனாகவும், வன்முறைக்கு பழக்கப்பட்டவனாகவும் வலம் வர,சனந்த் அமைதியான, மென்மையான சுபாவம் கொண்டவனாக இருக்கிறான். இந்த வறண்ட சூழலில் இருவரின் நட்பே அவர்களுக்கு ஒரே புகலிடமாக அமைகிறது.இந்த ஒடுக்குமுறை நிறைந்த வீட்டிற்குள் சனந்தின் அண்ணன் சௌந்தரராஜாவிற்க்கு மனைவியாக வருகிறார் கீர்த்தி சுரேஷ்.ஆணாதிக்க விதிகளும் அச்சுறுத்தல்களும் நிறைந்த அந்த வீட்டில் அண்ணியாக வரும் இவர் மட்டுமே சனத்திடம் ஒரு தாயைப் போன்ற கனிவோடும் இயல்பான மனிதநேயத்தோடும் பழகுகிறாள்.வீட்டின் கட்டுப்பாடுகளால் அழுத்தப்பட்டு தன் உணர்வுகளையும் விருப்பங்களையும் வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் சனந்திற்கு அண்ணி கீர்த்தி சுரேஷின் ஆதரவும் கனிவும் மிகப்பெரிய ஆறுதலாக மாறுகிறது.ரிஷிகாந்த்தும் தன் நண்பனின் அண்ணி கீர்த்தி சுரேஷ் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் கொள்கிறான்.முதல் பாதியின் இறுதியில் கதை எதிர்பாராத ஒரு பேரதிர்ச்சியைச் சந்திக்கிறது. குடும்பத்தின் ஆணாதிக்கக் கெடுபிடிகளும்,ரகசிய ஒடுக்குமுறைகளும் தாங்க முடியாமல் கீர்த்தி சுரேஷ் தற்கொலை செய்து கொள்கிறாள்.தன்னை மனிதனாக மதித்து அன்பு காட்டிய ஒரே ஜீவனான அண்ணி கீர்த்தி சுரேஷின் இந்த கொடூரமான முடிவு சனந்தின் வாழ்க்கையையும் மனநிலையையும் முற்றிலும் தலைகீழாக மாற்றிப் போடுகிறது. அமைதியாக இருந்த சனத் தீவிரமான உளவியல் அதிர்ச்சிக்கும் கடுமையான கோபத்திற்கும் ஆளாகிறான். கீர்த்தியின் மறைவுக்குப் பிறகு குடும்பத்தின் போலித்தனமான ‘கௌரவம் மற்றும் ஆணாதிக்கத்தின் கொடூரத்தை உணரும் சனந்,தனது பாலின அடையாளப் போராட்டத்தையும் தனக்குள் இருக்கும் சீற்றத்தையும் வெளிப்படுத்தத் தொடங்குகிறான்.வீட்டில் எதிர்ப்பு கிளம்ப சனந் வீட்டை விட்டு ஒடிவிடுகிறான். அவனை தேடி கண்டுபிடித்து கொன்று விடுமாறு நண்பன் ரிஷிகாந்த்தை மன மாற்றம் செய்கின்றனர் சனந்தின் குடும்பத்தினர். இறுதியில் தன் தன் நண்பன் சனந்தின் இந்த அகப் போராட்டத்தையும்,கீர்த்தியின் இழப்பால் அவன் சந்திக்கும் வேதனையையும் முதலில் உணராத ரிஷிகாந்த் இதற்கு சம்மதித்து சனந்தை தேடிச் செல்கிறான். அதன் பின் என்ன நடந்தது ரிஷிகாந்த் சனந்தை தீர்த்துக் கட்டினானா சனந் ரிஷிகாந்த்தின் மனதை மாற்றினானா இருவருக்குள்ளும் நடந்த மனமாற்றம் என்ன ஆணாதிக்கக் குடும்பத்தின் போலி கௌரவங்களை எதிர்த்து நின்றனரா இறுதியில் எடுக்கும் முடிவு என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
கீர்த்தி சுரேஷ்,ரிஷிகாந்த்,சனந்த், ராமச்சந்திரன் துரைராஜ்,கஜராஜ்,ஜீவா சுப்பிரமணியன்,முத்துக்குமார் ஆகிய அனைவரும் கதைக்கு சிறந்த தேர்வாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக நடித்துள்ளனர்.
இளையராஜா அவர்களின் இசையும், ஒளிப்பதிவாளர் எஸ்.திருநாவுக்கரசு அவர்களின் ஒளிப்பதிவும் கதைக்கு மிகப்பெரிய பலம்.
இப்படி ஒரு துணிச்சலான கதையை கையில் எடுத்து அதற்கு சிறந்த முறையில் திரைக்கதை உருவாக்கி இயக்கி இருக்கும் இயக்குனர் கார்த்திக சுப்புராஜ் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.
டோரதி துணிச்சலான புதுமை.