போஸ் வெங்கட் வினோதினி வைத்தியநாதன் தம்பதியினர் ஒரு குழந்தையை பெற்றெடுக்கின்றனர்.ஆனால் பிறந்ததும் மூச்சு நின்று உயிரை விடும் அந்தக் குழந்தை தெய்வீக தலையீட்டால் அதிசயமாக உயிர் பிழைக்கிறது.ஆனால் அந்த குழந்தைக்கு விதி ஒரு வினோதமான கட்டுப்பாட்டை விதிக்கிறது இதனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஆணாகவும் மாறி வாழும் அதிசய தன்மை ஏற்படுகிறது. ரஜினி என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை வளரும்போது பெற்றோர் விபத்தில் உயிரிழக்கின்றனர்.இறுதி சடங்கை பகல் வடிவமான ரேஷ்மா செய்துவிட்டதால்,இரவு வடிவமான சந்தோஷ்க்கு ரேஷ்மா மீது அதிகமான கோபமும் பகையும் ஏற்படுகிறது. வளர்ந்த வந்த நிலையில் பகல் வடிவமான ரேஷ்மா ஒரு டி.என்.ஏ. ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து விஞ்ஞானி வினோத் கிஷன் இடம் காதல் கொள்கிறாள்.இரவு வடிவமான சந்தோஷ் பார்டெண்டராக பணிபுரிந்துவரும் சம்யுக்தா விஸ்வநாதன் மீது காதல் கொள்கிறான்.இருவருக்கும் பொதுவான நண்பனாக வி.டி.வி. கணேஷ் இருக்கிறார். தொடர்ச்சியான பாலின மாற்றங்களால் இரு காதல் உறவுகளிலும் தவறான புரிதல்களும் சங்கடங்களும் தோன்றுகின்றன.இந்த நிலையில் ஒரு கார்ப்பரேட் நிறுவன உரிமையாளர் பக்ஸ் இவர்களின் தனித்துவமான உடல்நிலையை கண்டுபிடித்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று பணம் சம்பாதிக்க சதி திட்டம் வகுக்கிறார்.தங்கள் பிறப்பு ரகசியத்தை காதலர்களிடம் வெளிப்படுத்தவும் முடியாமல்,இந்த கார்ப்பரேட் சதியை முறியடிக்கவும் போராடும் இருவரும் இறுதியில் வெற்றி பெற்றனரா அவர்களின் காதல் கனவுகள் நிறைவேறினவா என்பதே படத்தின் மீதிக்கதை.
முதல் படத்திலேயே சந்தோஷ் திறமையாக தன்னை அடையாளப்படுத்தி நடித்திருக்கிறார்.
ரேஷ்மா வெங்கடேஷ் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து அனைத்து காட்சிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்.
மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன்,வினோத் கிஷன், விடிவி கணேஷ், பகவதி பெருமாள்,விச்சு விஸ்வநாத்,போஸ் வெங்கட்,வினோதினி வைத்தியநாதன் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
சந்தக்குமார் சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவும்,சாம் சி.எஸ்சின் இசையும் கதைக்கு பலம்.
ஒரே உடலில் இரண்டு முரணான வடிவங்களாக வாழும் சவாலான கோட்பாட்டை தெளிவாகவும் நம்பகமாகவும் திரைக்கதை அமைத்து வெகு நேர்த்தியாக கையாண்டு இயக்கி இருக்கும் இயக்குனர் அஸ்வின் கந்தசாமி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
டபுள் ஆக்குபன்சி அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற டபுள் காமெடி.
