ஹபீபி விமர்சனம்

கஸ்தூரி ராஜா கைத்தறியை உயிராகக் கருதும் மூத்த நெசவாளர் இவரது குடும்பம் தலைமுறை தலைமுறையாக கைத்தறி நெசவுத் தொழிலை மிகவும் நேர்த்தியாக செய்து வருகிறது.காலம் மாறுகிற சூழலில் மின் விசைத்தறிகளின் வரவாலும், நவீன மாற்றங்களாலும் கைத்தறித் தொழில் மெல்ல மெல்ல நலிவடைய தொடங்குகிறது. போதிய வருமானம் இன்றி குடும்பத்தை நடத்துவது பெரும் சவாலாக இருக்கிறது. தொழில் நலிவடைந்ததால் ஏற்படும் வறுமையின் காரணமாக,கஸ்தூரிராஜாவின் தம்பி குடும்பத்தைக் காப்பாற்ற வளைகுடா நாட்டிற்கு பிழைப்பு தேடிச் செல்கிறார்.வளைகுடா நாட்டு வேலை குடும்பத்திற்குப் பணத்தை ஈட்டிக் கொடுத்து, பொருளாதார ரீதியாக ஓரளவுக்குக் கைகொடுத்தாலும் கஸ்தூரி ராஜாவுக்கு இதில் உடன்பாடில்லை.இதற்கிடையில் கைத்தறித் தொழில் இன்னும் மோசமான நிலையை எட்டுகிறது. ஊரில் இருக்கும் மற்றவர்கள் இவரின் மகன் ஈஷாவையும் வளைகுடா நாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் பேச்சை எடுக்கிறார்கள்.இதுதான் குடும்பத்தைக் கரை சேர்க்க ஒரே வழி என்று வற்புறுத்துகிறார்கள்.இதற்கிடையில் தன் மாமன் மகள் மாளவிகா மனோஜ் மீது ஈஷாவுக்கு ஒரு ஆழமான மௌனக் காதல். வளைகுடா நாட்டிற்கு சென்றால் பணம் கிடைக்கும் என்பது ஈஷாவுக்கு தெரிந்தாலும்,அவனுக்குள் ஒரு பெரிய தயக்கமும் பயமும் இருக்கிறது.தன் சித்தப்பாவை போல நாமும் வெளிநாட்டிற்குச் சென்று விட்டால் குடும்பத்தையும்,தன் உயிரான காதலியையும் பிரிந்து பல வருடங்கள் அந்நிய மண்ணில் தனியாகக் கிடக்க நேரிடும் என்று அவன் அஞ்சுகிறான். இயந்திரத் தறிகளின் வருகையாலும், வறுமையாலும் அந்த ஊர் இளைஞர்கள் பிழைப்புக்காக வளைகுடா நாடுகளுக்கு இடம்பெயர தொடங்குகிறார்கள்.இந்த பொருளாதார இடப்பெயர்வும் மாறுகின்ற காலமும் ஈஷாவின் குடும்பத்தையும், அவனது மௌனக் காதலையும் எப்படி மாற்றியமைக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
முகமது யூசுப்பாக வரும் கஸ்தூரி ராஜா முதிர்ந்த,எதார்த்தமான நடிப்பால் கொள்கைப்பிடிப்புள்ள இஸ்லாமியத் தந்தையாக வாழ்ந்திருக்கிறார்.
மற்றும் ஈஷா,மாளவிகா மனோஜ்,தனஸ்ரீ, அனுஸ்ரேயா ராஜன்,ஜெயஸ்ரீ பினுராஜ், அருள் குமார்,ரேகா குமணன்,மலர் கைசென்,மாஸ்டர் தீஹன்,தீக்ஷா ஸ்ரீ உட்பட அனைதது நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
சாம் சி.எஸ் இன் இசையும்,ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
இஸ்லாமியக் குடும்பங்களின் அசல் வாழ்வியலையும், நலிவடைந்து வரும் கைத்தறி நெசவுத் தொழிலின் பின்னணியையும் எதார்த்தமாக இயக்கி இருக்கும் இயக்குனர் மீரா கதிரவனுக்கு பாராட்டுகள்.
ஹபீபி எதார்த்தம் நிறைந்த வாழ்வியல் பாடம்