வேலைக்காக துபாய் செல்ல தயாராக இருக்கும் நாயகன் பவிஷ்,நாக துர்காவை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அங்கு வரும் மாதர் சங்கத் தலைவியான வனிதா,பவிஷுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என போராட்டம் நடத்துகிறார்.இதனையடுத்து, இன்ஸ்பெக்டரான செல்வராகவனிடம் பவிஷ் தனது காதல் கதையை சொல்லத் தொடங்குகிறார்.நாக துர்காவை முதன்முதலில் பார்த்தவுடனே பவிஷ் காதலில் விழுகிறார்.அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் அளவுக்கு அவளை ஆழமாக நேசிக்கிறார்.ஆனால் நாக துர்காவின் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் பவிஷின் பொருளாதார நிலையை மீறியதாக இருக்கின்றன.காதலியின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தனது வசதிக்கு மீறி செலவு செய்யத் தொடங்குகிறார் பவிஷ். கையில் பணம் இல்லாத நிலையிலும் கடன் வாங்கி அவளுக்காக செலவு செய்கிறார். காதலை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்த இந்த முடிவுகள், நாளடைவில் அவரை பெரும் கடன் சுமையில் சிக்க வைக்கின்றன.ஒரு கட்டத்தில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாக துர்கா பவிஷிடம் கூறுகிறார்.காதலியை இழக்கக் கூடாது என்ற எண்ணத்தில் பவிஷும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.
ஆனால் அந்த நேரத்தில் நாக துர்காவின் அம்மா எதிர்பாராத விதமாக குறுக்கிடுகிறார்.பவிஷின் கடன் நிலைமையை அறிந்த அவர் “இவ்வளவு கடனில் இருக்கும் ஒருவரால் என் மகளை எப்படி நன்றாக பார்த்துக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்.இந்த விவகாரம் பெரிதாகி காவல் நிலையம் வரை செல்கிறது. அங்கு அனைவரின் முன்னிலையிலும் பவிஷின் தந்தையான கே.எஸ்.ரவிகுமார் அவமானப்படுத்தப்படுகிறார்.காதலுக்காக பவிஷ் எடுத்த முடிவுகளும் வாங்கிய கடன்களும் குடும்பத்தின் மரியாதையையே பாதிக்கும் சூழ்நிலையாக மாறுகிறது.இந்த சம்பவத்தால் மனமுடைந்த கே. எஸ். ரவிகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பவிஷ் மீது கடும் கோபம் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவரை விட்டு விலகும் நிலைக்கும் செல்கிறார்கள்.இதற்கிடையில், பவிஷ் தனது வேலையையும் இழக்கிறார்.
காதலை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்த ஒவ்வொரு முடிவும், அவரது வாழ்க்கையில் இருந்த சந்தோஷம், நிம்மதி குடும்ப உறவு என அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக பறித்துச் செல்கிறது.
இப்போது தனது வாழ்க்கையை மீண்டும் எப்படி திரும்ப பெர போகிறார் பவிஷ் குடும்பத்துடன் மீண்டும் இணைந்தாரா துபாய்க்கு வேலைக்காக சென்றாரா பவிஷ் மற்றும் நாக துர்காவின் காதல் திருமணத்தில் முடிந்ததா அல்லது பிரிவில் முடிந்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் பவிஷ், காதலுக்காக எதையும் செய்யத் துணியும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
நாயகி நாக துர்கா அறிமுக படம் போல தெரியாத அளவுக்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மற்றும் கே.எஸ்.ரவிக்குமார்,செல்வராகவன், வனிதா விஜயகுமார் என அனைவரின் நடிப்பு சிறப்பாக உள்ளது.
இசையமைப்பாளர் பாக்ஸனின் இசையும், பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவும் படத்தின் மற்றொரு பலம்.
காதலுக்காக அளவுக்கு மீறி கடன் வாங்குவதால் ஒருவரின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை மையக் கருவாகக் கையில் எடுத்து சிறந்த திரைக்கதையை உருவாக்கி இருக்கும் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் அவர்களுக்கு பாராட்டுகள்.
’லவ் ஓ லவ்’ ஒரு உறவில் ஒருவர் மற்றொருவரை புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து செல்ல வேண்டியதன் அவசியத்தையும், ஆடம்பர வாழ்க்கை முறையால் ஏற்படும் இழப்புகளையும் உணர்த்துகிறது.
