பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த அய்யா கதாபாத்திரத்தின் பிரத்யேக மெழுகுச்சிலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் திறந்து வைக்கப்பட்டது. விழாவில் இயக்குனர் மகேந்திரன் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார்.
இந்த அய்யா மெழுகுச்சிலையுடன் நின்று செல்ஃபி எடுத்து அனுப்பும் 100 பேருக்கு சீதக்காதி படத்தில் பிரீமியர் டிக்கெட்டுக்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அய்யா ஆதிமூலம் 75 வயதுடைய நாடக நடிகர். சமகாலத்திய மொத்த நாடக நடிகர்களின் ஒரு உருவம் தான் ஆதிமூலம். தனி மனிதர்களுக்கு மெழுகுச்சிலை வைப்பதை தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நாம் எழுதி, உருவாக்கிய ஒரு கதாபாத்திரத்திற்கு மெழுகுச்சிலை வைப்பது இது தான் முதல் முறை. 2.0, பாகுபலி போன்ற படங்களில் பணிபுரிந்த விஸ்வநாத் சுந்தரம் தான் விஜய் சேதுபதியின் இந்த ஆதிமூலம் கதாபாத்திரத்தை வடிவமைத்தவர் என்றார் இயக்குனர் பாலாஜி தரணீதரன்.
நமக்கெல்லாம் பிடித்த ஒரு நடிகர் விஜய் சேதுபதி, எனக்கு பிடித்த ஒரு இயக்குனர் பாலாஜி தரணீதரன். அவர் கதைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர். மிகவும் சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் விஜய் சேதுபதி. இவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த படம் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அவர்கள் உழைப்பிக்கு பெரிய வெற்றி கிடைக்க வேண்டும். நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் தான் ஒரு இயக்குனரும், நடிகரும் நல்ல படத்தை கொடுக்க முடியும். அந்த வகையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார் இயக்குனர் மகேந்திரன்.
மகேந்திரன் சார் இந்த விழாவுக்கு வருவார் என்று எனக்கு தெரியாது. ஹைதராபாத்தில் இருந்து நான் இங்கு வந்ததற்கு எனக்கு அவரை சந்திக்கும் பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த படக்குழு படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றார் ஒப்பனையாளர் விஸ்வநாத் சுந்தரம்.