திரைப்பட வெளியீட்டை ஒழுங்குப்படுத்த வேண்டும் – ‘தோனி கபடி குழு’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி!

‘தோனி கபடி குழு’ படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார் நம் கலாச்சாரம் சார்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அதற்கு எனது பாராட்டுக்கள். தமிழ் கலாச்சாரத்தைச் சார்ந்த ஒரு விளையாட்டை படமாக உருவாக்கி அதை இன்று மேடையேற்றியிருக்கும் படக்குழுவினருக்கு எனது மிகப்பெரிய பாராட்டுக்கள். அப்புக்குட்டி கூறினார், ‘குடி’ இல்லாமல் ஒரு ட்ரைலரைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று. படக்குழுவினர் ‘குடி’யை நம்பி படம் எடுக்கவில்லை என்பது மகிழ்ச்சியளித்தாலும் தமிழக அரசு இதில் கிடைக்கும் வருமானத்திற்காகவே மதுக்கடைகளை நடத்துகிறது என்பது வருத்தமாகத்தான் உள்ளது.

தமிழ் சினிமா ‘குடி’யை நம்பி இல்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. ஒவ்வொரு இயக்குநருக்கும் தன்னுடைய முதல் படம் வெளியாகும் வரைக்கும் பல வித துன்பங்கள், இடையூறுகள், தடைகள், மன உளைச்சல்கள் போன்றவை இருக்கும். ஆனால், இப்படத்தின் இயக்குநர் ஐயப்பனிடம் அவை எதுவும் இல்லாமல் யதார்த்தமாகப் பேசியதிலிருந்து இப்படம் எந்தளவுக்கு தரத்தோடு இருக்கும் என்பதை உணர முடிகிறது. இப்படத்தில் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அது சாதாரண செயல் அல்ல.

அபிலாஷ் நடிகரைத் தாண்டி கூடிய விரைவில் இயக்குநராகி விடுவார். அதற்கான அத்தனை தகுதிகளும் அவரிடம் இருக்கிறது. தன்னைக் கூட பார்த்துக் கொள்ள நேரமில்லாமல் பல வேலைகளைச் செய்துக் கொண்டிருக்கிறார். அதற்காக தமிழ் சினிமா உங்களுக்கென்று ஒரு இடத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்.

‘இரட்டைச்சுழி’ படத்திலிருந்தே லீமாவைத் தெரியும். குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். சினிமா பின்னணியில்லாத ஒரு பெண் இன்று கதாநாயகியாக வளர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முகமது இஷாக், சிறிய படங்களை எடுத்து அதை வெளியிடுவதற்கான பிரச்னைகளை சந்திக்கும் பட்சத்தில் நான் அவர்களுக்கு உதவுகிறேன் என்று கூறினார். அப்படி யாராவது தரமான படங்கள் எடுத்து பிரச்னைகளோடு இருந்தால் இஷாக்கை அணுகலாம்.

ஏனென்றால், இந்த படமும் வெளியாவது அவ்வளவு எளிதல்ல. வெளியில் உள்ள அரசியலை பேசுவதற்கு முன்பு சினிமாவில் இருக்கும் அரசியலைப் பற்றி பேச வேண்டும். இன்றைய சூழலில் எந்த மாதிரியான படமாக இருந்தாலும் திரையரங்கிற்கு சென்றால் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டுதான் உள்ளது. அது ‘சர்காரில்’ ஆரம்பித்து ‘தோனி கபடி குழு’ வரையில் பிரச்னை இருக்கத்தான் போகிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், அவரவர்களுக்கு தன்னுடைய படங்கள் தான் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, சினிமா நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. பெரிய படம் வந்ததால் சிறிய படங்கள் ஓடவில்லை என்று இன்று கூட செய்திகள் வந்தது. EC உறுப்பினர்கள் இருவர் ராஜினாமா செய்துவிட்டார்கள்.

சினிமா மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறது. இதை இப்படியே விட்டுவிட்டால் வருங்காலத்தில் மொத்த தமிழ் சினிமாவும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் சென்றுவிடும். ‘அமேசான்’, ‘நெட்ஃபிளிக்ஸ்’ வந்துவிட்டது.

இதை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தவில்லையென்றால் மொத்த திரையரங்கங்களையும் இழுத்துமூட வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். ரூ.500 கட்டினால் போதும் ஆன்லைனில் உலக சினிமா அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள். திரையரங்கத்திற்கு யாரும் வரமாட்டார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கூட ‘ஆப்(app)‘ செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு தேவையான போது பார்த்துக் கொள்ளலாம் என்ற சூழ்நிலையும் வந்துவிட்டது.

சினிமாவை இப்போது காப்பாற்றவில்லையென்றால், சினிமாவும் அதை சார்ந்தோர்களும் முடங்கிப் போகும் வாய்ப்பு அதிகம்.

என்னுடைய இயக்குநர் தாமிரா கடன் வாங்காமல் படம் எடுத்து இன்று பல கோடி ரூபாய்க்கு கடனாளியாக அவதிப்படுகிறார். இதை மேலும் தடுக்க, விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு NOC கொடுக்கலாமா? வேண்டாமா? என்று அதைச் சார்ந்த சங்கங்கள் தீர்மானங்கள் கொண்டு வந்து அதை தயாரிப்பாளர்களிடம் கொடுத்து வழி காட்டினால் பல தயாரிப்பாளர்களின் தற்கொலைகள் தடுக்கப்படும். படத்தைச் சார்ந்தோர்களும் வறுமையில் வாடாமல் தடுக்க முடியும்.

எங்களுக்கு இருக்கும் பணப் பிரச்னைகளை சரிசெய்தால் தான் நாங்கள் உங்கள் படத்தை வெளியிடுவோம் என்று மிரட்டல் விடுவதும் தடுக்கப்படும். தயாரிப்பாளர் சங்கத்திடம் படத்தை வெளியிட மறுதேதியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் அதற்கான எந்த பதிலும் வரவில்லை. விநியோகதஸ்தர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் போன்ற அனைத்து சங்கங்களும் ஒற்றுமையாக சேர்ந்து செயல்பட்டு சினிமாவைக் காப்பாற்றாமல் விட்டால், தமிழ் சினிமாவை ஒட்டுமொத்தமாக வேறொருவர் கையில் தாரைவார்த்துக் கொடுக்கும் நிலைக்கு வந்துவிடுவோம்.

‘வெப் சீரிஸ்’ (Web series) வந்துவிட்டது. எல்லோரும் பிழைப்பிற்காக அங்கு சென்று விடுவார்கள். ஒரு காணொளியை எத்தனை பேர் எத்தனை விநாடிகள் பார்க்கின்றனர் என்பது முதற்கொண்டு தெளிவாக கூறிவிடுகிறார்கள். ஆனால் திரையரங்கத்தில் 4 காட்சிகள் சிறிய படங்களுக்குக் கொடுப்பதில்லை. காலை காட்சிகள் போட்டுவிட்டு, சிறிய படத் தயாரிப்பாளர்களைத் தவிக்க விடுகிறார்கள். மாலை மற்றும் இரவு காட்சிகளை சிறிய படங்களுக்கு கொடுங்கள். பண்டிகை நாட்களில் சிறிய படங்களை வெளியிடுங்கள். பெரிய படங்களை எப்போது போட்டாலும் மக்கள் பார்ப்பார்கள்.

அதேபோல், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஒரு டிக்கெட்டிற்கு ரூ.30 என்றால் 5 டிக்கெட்டுகளுக்கு ரூ.150 என்று கட்டணம் வசூலிக்கிறார்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 500 பேர் பதிவு செய்தால் ஒரு மாதத்திற்கு ரூ.4,50,000 திரையரங்க உரிமையாளர்களுக்குச் செல்கிறது. திரையரங்கத்திற்கு வருபவர்களைக் குறைப்பது திரையரங்க உரிமையாளர்களான நீங்கள் தான். இக்கட்டணத்தை எத்தனை நபருக்கு பதிவு செய்தாலும் ஒரு முறை பதிவு செய்ய ரூ.30 தான் வசூலிக்க வேண்டும் என்று தற்போது இருக்கும் முறையை மாற்றி மறுபரிசீலனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல் தின்பண்டங்களின் விலைகளையும் குறைக்க வேண்டும். இல்லையென்றால், நாளை யாரும் திரையரங்கத்திற்கு வரமாட்டார்கள். அரங்கத்தை இழுத்துமூட வேண்டிய சூழல்தான் ஏற்படும். இதுபற்றி சென்ற வாரம் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருக்கிறார்.