டூரிஸ்ட் பேமிலி விமர்சனம்

சசிகுமார்,அவரது மனைவி சிம்ரன், இரு மகன்கள் மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ் ஆகிய நான்கு பேரும் இலங்கையில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக சட்ட விரோதமாக படகில் ராமேஸ்வரத்திற்குத் தப்பித்து வருகிறார்கள்.அங்கிருந்து அவர்களை காப்பாற்றி சிம்ரனின் அண்ணன்
யோகி பாபு இவர்களுக்கு சென்னையில் ஒரு குடியிருப்புப் பகுதியில் வாழ்க்கையை தொடங்க உதவி செய்கிறார். அங்கிருப்பவர்களிடம் ஈழத் தமிழர்கள், அகதிகள் என்பதை மறைத்து அனைவரிடமும் பாசத்தோடு பழகி அவர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடக்க,போலீஸ் இலங்கையிலிருந்து வந்தவர்களை திட்டமிட்டு சதி வேலையை செய்ததாக சந்தேகத்தோடு தேட ஆரம்பிக்கிறார்கள். சசிகுமார் மற்றும் குடும்பத்தின் அடையாளத்தைப் பற்றி அவர்கள் கண்டுபிடித்தார்களா அவர்கள் பயங்கரவாதிகள் என்று காவல்துறையினர் குற்றம் சாட்டினார்களா அதன் பின் என்ன
நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
சசிகுமார் அகதியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்தாலும்,புதிய வாழ்க்கையை வாழ்வதற்காக தன்னுடைய கஷ்டங்களை மறைத்து,மகிழ்ச்சியாக குடும்பத்தினருடன் ஒரு நல்ல மனிதராக படத்தில் வாழ்ந்து காட்டியுள்ளார்.
சிம்ரன் தன்னுடைய அனுபவ நடிப்பால் கை தட்டல் பெறுகிறார்.
மிதுன் ஜெய் சங்கர்,கமலேஷ் ,யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர்,ரமேஷ் திலக்,பக்ஸ் (எ) பகவதி பெருமாள்,இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலட்சுமி ஆகியோரின் பங்களிப்பு கதைக்கு சிறப்பாக அமைந்துள்ளது.
ஷான் ரோல்டன் இசையும்,அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவும் கதைக்கு மிகப்பெரிய பலம்.
பல நாடுகளிலிருந்து அகதிகளாக புதிய நாட்டிற்கு புலம் பெயரும் குடும்பங்கள் படும் இன்னல்களை அழகாகவும் தத்ரூபமாகவும் விரிவாகவும் கூறியிருக்கும் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந் அவர்களுக்கு பாராட்டுகள்.
டூரிஸ்ட் பேமிலி குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம்.