“யுத்த சத்தம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு


நடிகர் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து இயக்குநர் பார்த்திபன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘யுத்த சத்தம்’.

இதுவரை தமிழ்த் திரையுலகில் ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பெண்ணின் மனதை தொட்டு’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘தீபாவளி’, ‘மனம் கொத்திப் பறவை’, ‘தேசிங்கு ராஜா’ என பல சூப்பர் ஹிட் ஃபேமிலி என்டர்டெய்னிங் படங்களைக் கொடுத்த இயக்குநர் எழிலின் இயக்கத்தில் வித்தியாசமான த்ரில்லர் திரைப்படமாக இந்தப் படம் தயாராகியுள்ளது.

கல்லால் குளோபல் என்டர்டெயின்மென்ட் மற்றும் MKRP புரோடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.

இந்த ‘யுத்த சத்தம்’ திரைப்படத்தில், சாய்பிரியா கதாநாயகியாக நடிக்க ரோபோ ஷங்கர், மனோபாலா, வையாபுரி, சாம்ஸ், அஸ்வின் ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் கதையை தமிழின் முன்னணி குற்ற நாவலாசிரியர்களில் ஒருவரான ராஜேஷ்குமார் எழுதியுள்ளார்.

இந்த `யுத்த சத்தம்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன், இயக்குநர் எழில், நாயகி சாய்பிரியா, இயக்குநர் சங்க நிர்வாகிகள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நாயகி சாய் பிரியா பேசும்போது, “இது எனக்கு ஒரு உணர்வுப்பூர்வமான ஒரு தருணம். எழில் சார் முதல்முறையாக வித்தியாசமான பாணியில் படம் செய்துள்ளார். அதில் நானும் இருப்பதில் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி.

படத்தில் பார்த்திபன் சாருடன் காட்சிகள் அதிகம் இல்லை, ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும்போது எனக்கு நிறைய அறிவுரைகளை தந்தார். இமான் சாரின் மிகப் பெரிய ஃபேன் நான். அவர் பாடலில் நடித்தது பெருமை.

படத்தைப் பற்றிய தகவல்களை பகிர்ந்த பின் ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்ற திருக்குறளை கூறினார். மேலும் “விவசாயிகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான குரல் கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார். அத்துடன் “வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு…” என பேச்சை முடித்தார்.

நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது, “தீபாவளி’ படத்தில் ஆரம்பித்தது, எழில் சாருடனான பயணம், இந்தப் போஸ்டரை பார்த்தால் தெரியும்… இது அவர் படம் போலவே இல்லையென்பது..! காமெடி படத்தில் கலக்குபவர், வேறொரு மாதிரி இப்படத்தை எடுத்துள்ளார்.

பார்த்திபன் சாருடன் நடித்தது மிக மிக சந்தோசம், சின்ன சின்ன அசைவுகளையும் படத்தில் சொல்லிக் கொடுத்தார். எல்லோரும் மிக கடின உழைப்பை தந்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது…” என்றார்.

படத் தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா பேசும்போது, “இந்தப் படத்தில் படம் முழுக்க ஒரு போதையை வைத்திருகிறார் எழில் ஸார்.. நான் எடிட் செய்யும்போதுதான் படத்தைப் பார்த்தேன். திரையில் பார்க்கும்போது உங்களுக்கு இன்னும் பிடிக்கும்.

வழக்கமாக எழில் சார் படத்தில் நிறைய கேரக்டர்கள் இருக்கும், அவர்கள் பேசுவதில் எதை கட் செய்வது என்றே தெரியாது. ஆனால் இப்படத்தில் அப்படி எதுவும் இல்லை. அதற்கெல்லாம் சேர்த்து பார்த்திபன் சார் பேசிவிட்டார். அவர் நடிப்பில் எதை எடிட் செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை. படம் நன்றாக வந்துள்ளது…” என்றார்.

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசும்போது, “எழில் ஸார் அவரின் அனைத்துப் படங்களிலும், அனைத்துக் காட்சிகளிலும் காமெடி இருக்க வேண்டும் என்று நினைக்கிறவர். நான் ராஜேஷ்குமாரின் மிக தீவிர ரசிகன். அவர் நாவலை வாங்கி ஒரு திரில்லர் படத்தை எடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நான் செய்த சில மாற்றங்களை இயக்குநர் எழில் நேர்மையான முறையில் கையாண்டார். இன்றைய காலகட்டத்தில் பல இயக்குநர்கள் அதை செய்வதில்லை. ஒரு இயக்குநர் நான் எழுதிய காட்சிகளை அவர் படமாக்கும்பொழுது  புதிதாக அவர் சொல்லி கொடுப்பது போல நடந்து கொண்டுள்ளார். ஆனால், எழில் இந்த மேடையில் என்னைப் பாராட்டியுள்ளார். இதுவே அவரின் நேர்மையை வெளிப்படுத்துகிறது.  இமான் போதை தரும் இசையை தருபவர். இதில் போதையையே இசையாக தந்துள்ளார். இந்தப் படம் மிக நன்றாக வந்துள்ளது. படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்றே நம்புகிறேன்…” என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, “தீபாவளி’ படத்திலிருந்து எடிட்டர் ரோபோ முதல் நான்வரை எல்லோருமே எழில் சாருடன் இருக்கிறோம். ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும்.. எல்லாவற்றையும் எப்படி சமாளிக்க வேண்டும்.. என்பதையெல்லாம் கற்றுக்கொண்டது எழில் சாரிடம்தான்.

எந்த விசயத்தையும் கூலாக சமாளிப்பார். ஒருவரின் திறமையை மதிக்க தெரிந்தவர் எழில் சார். சூரி, ரோபோ சங்கர் ஆகியோரின் திறமையை கணித்ததால்தான் ‘தீபாவளி’ படத்தில் நடிக்க வைத்தார்.

நான் பார்த்திபன் சாருடன் ‘மாவீரன் கிட்டு’ படத்தில் வேலை பார்த்தேன். எழில் சாரும், பார்த்திபன் சாரும் வேறு மாதிரி வேலை பார்ப்பவர்கள். எப்படி ஒன்றாக படம் செய்திருக்கிறார்கள் என்று பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது..” என்றார்.
நடிகர் ரவி மரியா பேசும்போது, “எனக்கு இதுவொரு நன்றி சொல்ல வேண்டிய மேடை. கரடு முரடான என்னை காமெடி பீஸாக மாற்றி உலகம் முழுக்க ரசிக்க வைத்தவர் எழில்தான். இன்று என்னால் குணசித்திரமும் செய்ய முடியும். காமெடியும் செய்ய முடியும் என அனைவரும் எனக்கு வாய்ப்பு தருவதற்கு அவர்தான் காரணம். அவருக்கு வாழ்நாள் முழுவதும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மனதை கலக்கும் படங்கள் செய்தவர். ‘மனம் கொத்தி பறவை’யில் காமெடியில் தன்னை நிரூபித்தார். அதே போல் இந்தப் படத்திலும் அவர் ஜெயிப்பார்…” என்றார்.

இயக்குநர் எழில் பேசும்போது, “நாம் இதுவரையிலும் எடுத்துக் கொண்டிருந்த படங்களில் இருந்து ரொம்ப தூரம் வந்துவிட்டோமே என யோசித்து, வேறு மாதிரி ஒரு படம் செய்யலாம் என முடிவு செய்தபோது, ராஜேஷ்குமாரின் நாவல் குறித்து தெரிய வந்தது.

நவீன் அந்த நாவலை மிக அழகான திரைக்கதையாக மாற்றினார். இந்தப் படத்தை எடுக்கலாம் என முடிவு செய்த போது, இமான் தான் ஒரு ஹாலிவுட் படமான இர்ரிவர்ஸிபள் படத்தின் சவுண்ட் ஒன்றை காட்டினார் அது படத்திற்கு பொருத்தமாக இருந்தது.

படத்தின் கடைசி 20 நிமிடங்களை எடுப்பது மிக சவாலாக இருந்தது. பார்த்திபன் சார் உடன் வேலை பார்த்தது எனக்கு மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். தயாரிப்பாளர்களுக்கு இந்தப் படம் பெரிய வெற்றியை தரும், அவர்கள் இன்னும் நல்ல திரைப்படங்களை தருவார்கள்..” என்றார்.