
பரோட்டா முருகேசன் ஒரு ஏழை விவசாயி மகள் மற்றும் மகனுடன் வாழ்கிறார். இந்நிலையில் தனது மகன் விஜயன் உயிருக்கு ஆபத்தில் இருக்கும் போது உள்ளூர் தெய்வமான ஒண்டிமுனியிடம் மகன் குணமடைந்தால் ஆட்டை பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார். மகன் அதிசயமாக உயிர் பிழைக்கும்போது, தெய்வத்திற்கு பலி கொடுக்க ஆட்டை வளர்கிறார்.மகன் பெரியவனாக வளர்ந்தாலும், கிராமத்தில் உள்ள இரண்டு சக்திவாய்ந்த நிலப்பிரபுக்களான பெரிய பண்ணாடி கார்த்திகேசன் மற்றும் சின்ன பண்ணாடி முருகன் இடையேயான பகையால் நல்லபாடனால் காணிக்கை செலுத்த முடியவில்லை. இந்த இரண்டு பேரின் அரசியல் பகையால் தான் உள்ளூர் கோவில் மூடப்பட காரணமாகிறது. கோவில் நடை திறக்கப்பட்டு, ஆண்டு திருவிழா மீண்டும் துவங்கினால் தான், ஆட்டை குலதெய்வத்திற்கு பலி கொடுக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படும் நல்லபாடன் இரு பண்ணாடிகளையும் சமாதானப்படுத்த முயல்கிறார். இதனிடையே திருமணம் செய்து கொண்டு சென்ற மகள் போதிய நகை போடாததால் மாமியார் வீட்டிலிருந்து விரட்டப்பட்டு தந்தையிடம் வருகிறாள். மகன் காதலிக்காக இரு சக்கர வண்டி வாங்க ஆட்டை விற்க முடிவு செய்கிறார். குடும்ப பிரச்சனை, கிராமத்து பிரச்சனையில் சிக்கி கோயிலை திறக்க வைத்து பரோட்டா முருகேசன் ஒண்டிமுனி தெய்வத்திற்கு ஆட்டை பலி கொடுத்து தன் வேண்டுதலை நிறைவேற்ற முடிந்ததா, இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
பரோட்டா முருகேசன் ஏழை விவசாயியாக நல்லபடனாக வாழ்ந்து காட்டியுள்ளார்.
மற்றும் விஜயன் , வித்யா சக்திவேல், தங்கம் ஆகியோர் இயல்பான கிராமத்து நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் அவர்களின் இசையும், ஒளிப்பதிவாளர் விமல் அவர்களின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்.
ஒரு எளிய கிராமவாசியின் வாழ்க்கையில் நடக்கும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நுட்பமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள இயக்குனர் சுகவனம் ஆர் அவர்களுக்கு பாராட்டுகள்.
ஒண்டிமுனியும் நல்லபாடனும் எல்லோர் மனதிலும் ஒன்றி வாழும், நம்பிக்கை, தியாகம், விசுவாசம் கலந்த உணர்ச்சிகள்.
