தாய் நிலம் விமர்சனம்

நாயகன் டாக்டர் அமர் ராமச்சந்திரன் எங்கே தன் பிஞ்சு மகளையும் இழந்து விடுவோமோ அல்லது தான் பலியாகி மகள் அனாதையாகி விடுவாளோ என்று அச்சமடைகிறார்.இதனால் கடல் வழியாகப் பல தடைகளையும் ஆபத்துகளையும் தாண்டித் தனது மகள் நேஹா அமருடன் தமிழகத்திற்கு அகதியாக தஞ்சம் அடைகிறார்.இதற்கு மிகப்பெரிய காரணமே 2008-ஆம் ஆண்டில் யுத்தத்தின் பேரழிவில் தனது மனைவியை இழந்து சொந்த வீடும் பூர்வீக மண்ணும் இரத்த பந்தங்கள் ஒரே நாளில் பறிபோன சூழலில் தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை எண்ணி நிலைகுலைந்து உள்ளார்.தான் திட்டமிட்டபடி உறவினர்களிடம் மகளை ஒப்படைக்க இயலாமல் போகவே,கையில் உயிருடன் மட்டுமே வந்து சேரும் தந்தையும் மகளும் பேருந்து நிறுத்தத்தின் கூரையையே தற்காலிக வசிப்பிடமாகக் கொண்டு பசி, வேலை இல்லாமை,பாதுகாப்பற்ற சூழல் மற்றும் அகதி என்று அவமான அடையாளத்துடன் அன்றாட வாழ்வாதார போராட்டத்தை தொடங்குகின்றனர். சாலையோரம் வாழும் இவர்களுக்குக் கடலில் தத்தளித்த போது காப்பாற்றிய மீனவர்கள் அகதி முகாமுக்கு அனுப்பாமல் விருப்பத்திற்கு மதிப்பளித்த காவல் ஆய்வாளர்,ஆட்டோ ஓட்டுநர்கள் மீசையோடு பயமுறுத்தினாலும் உதவும் நல்லுள்ளங்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் எனப் பல எளிய மனிதர்களின் ஆதரவால் நம்பிக்கையும் அன்பும் துளிர்விடுகிறது. காதல்,பாசம் மற்றும் ஒரு சமூகத்தின் வலியைப் பதிவு செய்யும் சூழலுக்கு இடையே தாய்நாட்டின் போர்க்களத்தில் இருந்து தப்பிய இந்தத் தந்தையும் மகளும் தமிழகத்தில் நிம்மதியான வாழ்வைக் கண்டடைந்தார்களா பேருந்து நிறுத்தத்தின் நிழலில் விடியும் அவர்களது எதிர்காலம் சுயமரியாதையுள்ள நிரந்தர முகவரியை பெற்றதா இறுதிக்காட்சியில் சிறுமி கண்ணீருடன் முகத்தில் பவுடர் போட்டுக் கொண்டு நடக்கும் உருக்கமான சூழலின் பின்னணி என்ன போரின் வடுக்கள் துரத்திய இந்த பிஞ்சு உள்ளத்தின் தவிப்புக்கு இந்தச் சமூகம் என்ன பதில் வழங்கியது என்பதே மீதிக்கதை!
கதையின் நாயகனாக நடித்திருக்கும் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தனது உருவம் மற்றும் கண்கள் மூலம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
மற்றும் பாலசிங்,நேஹா அமர்,நிமிஷா நம்பியார்,தீபக்,பத்மஜா அமர்,நிஹால், குருதக்ஷிணா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
இசையமைப்பாளர் அவுசேப்பச்சன் இசையும்,ஒளிப்பதிவாளர் பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவும் கதைக்கு பலம்.
போர் வன்முறை குண்டுவெடிப்புகளை கையில் எடுக்காமல் ஒரு தந்தை மகள் உறவின் வழியையும் அகதிகளின் வாழ்க்கையையும் மனிதநேயத்தையும் கையில் எடுத்து அதற்கு சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் அபிலாஷ் ஜி.தேவ் அவர்களுக்கு பாராட்டுகள்.
தாய் நிலம் தந்தை–மகளின் வலியையும் குழந்தைப் பருவத்தின் இயல்பையும் அகதி வாழ்வின் அவலத்தையும் விளக்கும் சிறந்த படைப்பு.